×

கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் நீக்கம் ஏன்? : அதிகாரிகள் விளக்கம்

டெல்லி : கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கான சான்றிதழ்களில் இடம்பெறக்கூடிய பிரதமர் மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டவர்கள் அதற்கான CoWIN சான்றிதழ்களை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் இந்தியா ஒருந்திணைந்த கோவிட் நோயை வெல்லும் என்ற அவரது வாசகமும் இடம்பெற்று இருக்கும். பிற நாடுகளில் இது போன்ற சான்றிதழ்களில் அந்நாட்டின் தலைவர்கள் படம் இடம்பெறுவதில்லை. அண்மையில் அஸ்டராஜெனிகா நிறுவனம் தான் உருவாக்கிய கோவிஷீல்டு தடுப்பூசி ரத்தம் உறைதல் உள்ளிட்ட பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக இங்கிலாந்து நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இந்த மருந்தை தயாரித்த பூனாவாலாவின் சீரம் நிறுவனம் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை பாஜகவுக்கு வழங்கியதால் இந்த விவகாரத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மவுனமாக இருப்பதாக காங்கிரஸ் விமர்சித்தது. இந்த நிலையில் CoWIN சான்றிதழில் இருந்து பிரதமர் மோடியின் படம் நீக்கப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசி குறித்த சர்ச்சையை அடுத்து, அவரது படம் நீக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் சிலர் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் மக்களவைத் தேர்தலை ஒட்டி தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படியே பிரதமர் மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளதாக ஆணையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே 2022ல் உத்தரபிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய ஐந்து மாநில தேர்தல்களின்போதும் அந்த மாநிலங்களில் வழங்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.

The post கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் நீக்கம் ஏன்? : அதிகாரிகள் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Delhi ,Modi ,India ,Dinakaran ,
× RELATED எல்லோரையும் போல நானும் எனது ஆட்டத்தை...